முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேரறிவாளனின் விடுதலை ஏன் – உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையில் எல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை தற்போது பார்க்கலாம்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 1998-ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 25 பேருக்கு மரண தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, 1999ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1999ம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1999ம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனுவை அனுப்பி வைத்தார். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுநர் நிராகரித்தார். தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார். 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி பேரறிவாளனின் கருணை மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

 

அதேசமயம், கருணை மனுவை குடியரசு தலைவர் தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கை முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு 2014ல் விசாரித்தது.

கருணை மனு மீது முடிவெடுக்க 11 ஆண்டுகள் தாமதமானதை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதிகள், தூக்குத் தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தூக்குத் தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறினர். இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்தது.

 

மேலும், இந்த வழக்கில் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது; இதனையடுத்து, இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, 7 பேரையும் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்ததால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது.

 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்தது. செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த பின்னணியில், எழுவர் விடுதலை விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதமாக உருவெடுத்தது.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில், 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால், 2018 ஏப்ரல் மாதம் தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது. இப்படியாக தொடர்ந்து வந்த வழக்கில், 31 ஆண்டுகளுக்கு பிறகு நீதி தாமதிக்கப்படுவதால் 142 -வது சட்ட விதியை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

அயோத்தி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முஸ்லிம்களுக்கு மசூதி அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை வழங்க, 142-வது விதியை பயன்படுத்தியே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைக்கவுள்ள அறக்கட்டளையில் நிர்மோஹி அகாடாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் 142-வது விதிக்கு உட்பட்டே நீதிபதிகள் பிறப்பித்தனர். அதே விதியைப் பயன்படுத்தி தான், நீதி தாமதிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி பேரறிவாளனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாகேஸ்வரராவ் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி – கண்ணகிநகரை சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

EZHILARASAN D

அரசியலில் சசிகலா 2.0..?

G SaravanaKumar

3,000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

G SaravanaKumar