திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் உட்கட்சி தேர்தல் நடத்தி அதற்கான அறிக்கைகளை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வரும் சூழலில் திமுகவில் உட்கட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் நாளை முதல் மே 1ம் தேதி வரை நடைபெறும் என திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சில திமுக மாவட்ட செயலாளர்கள் திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது நாங்கள் பல கோடி செலவழித்துள்ளோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிதாக பண பலத்துடன் கட்சிக்கு வந்துள்ளவர்கள் முக்கிய பதவிகளை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால், கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதனை தவிர்க்க கட்சி தலைமையே பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வார்டு, பேரூர் தேர்தல் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.








