சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

“சமூக நீதியைப் பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை; பட்டியல் இன மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள்…

“சமூக நீதியைப் பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை; பட்டியல் இன மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார் . 8 ஆண்டு சாதனை பற்றி விளக்கி பேசிய அவர், “கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு. பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைத்தது திமுகதான்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பட்டியலின மக்கள் அமைச்சரவையில் முக்கிய இடங்களை வகித்து வருகின்றனர், ஆனால் தமிழகத்தில் பட்டியல் இன மக்களை சேர்ந்த ஏதாவது ஒரு அமைச்சர் முக்கிய இடத்தில் இருக்கிறாரா? சமூக நீதியைப் பற்றி பேச திமுகவிற்கு தகுதி கிடையாது. ஆனால் பாஜக, மீனவர், பட்டியல் இன மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆட்சி செய்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனை மிக மகத்தானது. மக்களுக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று எல். முருகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன், மாநில நிர்வாகி வினோபாஜி மற்றும் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.