முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான கடலூர் எம்.பி ரமேஷுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராசு. வயது 60. இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி அன்று வேலைக்கு சென்ற கோவிந்தராசு இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக ஆலையின் பங்குதாரரான, கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 26-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், மதுவில் விஷம் கலந்து கொடுத்து கோவிந்தராஜூ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய சிபிசிஐடி போலீசார், 5 பேரை கைது செய்த நிலையில், தேடப்பட்டு வந்த கடலூர் எம்.பி. ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
இதனிடையே, சிபிசிஐடியின் பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், திமுக மீது அரசியல் கட்சியினர், காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக கடலூர் எம்.பி. ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தன்மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு நிரூபித்து வெளியே வருவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் பண்ருட்டி கிளை சிறையில் அடைக்கப்படுகிறார். வரும் அக்டோபர் 13-ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.







