தாய்லாந்தில் ஆற்று வெள்ளத்துக்கு நடுவிலும் நடந்துவரும் கரையோர ஓட்டல், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாவோ பிரயா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர ஓட்டல்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஓட்டல்களை பலர் மூடி விட்டனர்.
பாங்காக் அருகில் உள்ள நொந்தன்புரியில் (Nonthaburi), ஆற்றின் கரையோர உணவகங்களும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன. கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது வெள்ளமும் பாதிப்பை ஏற்படுத்துவதால் கரையோர ஓட்டல் உரிமையாளர்கள் கவலை கொண்டனர்.
இந்நிலையில் சோப்ரயா ஆண்டிக்யூ கபே (Chaopraya Antique Café ) என்ற ஓட்டலின் உரிமையாளர் புதுமையாக யோசித்தார். அதாவது, வெள்ளத்திற்கு நடுவில் ஓட்டலை திறக்க முடிவு செய்தார். மக்கள் வருவார்களா மாட்டார்களா என்றெல்லாம் அவர் கவலையே படவில்லை. நம்பிக்கையுடன் திறந்தார். ஒர்க் அவுட் ஆனது. கூட்டமில்லாமல் வெறிச்சோடி கிடந்த மேஜை, டேபிள்கள் இப்போது பிசியாகிவிட்டன.
வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும் மேஜைகளில் அமர்ந்தபடி, ஜாலியாக முட்டளவு நீரில் கால்களை நனைத்துக் கொண்டே, இங்கு சாப்பிடுவதை பலர் விரும்பத் தொடங்க, கூட்டம் அலைமோதுகிறது அங்கு. இப்போது இந்த ஓட்டலின் இருக்கைக்குப் பலர் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். இந்த ஓட்டல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.









