“திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது.

தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது.

மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது. ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.