‘தமிழகத்தில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து வருகிறது திமுக’ – மத்திய அமைச்சர்

தமிழகத்தில் திமுக அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து வருகிறது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று காலை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்…

தமிழகத்தில் திமுக அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து வருகிறது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று காலை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும்
பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நான் பார்த்தேன். தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசின் பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களை வைக்காமல், தமிழகத்தில் கூட்டாட்சி தத்துவத்தையே சிதைத்துள்ளது, ஆளும் திமுக அரசாங்கம்.

கூட்டாட்சி அமைப்பையே உடைத்து நாசமாக்குகிறது திமுக. எனவே தமிழக மக்கள் இந்த அரசுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும். நிச்சயமாக திமுகவை மக்கள் தண்டிப்பார்கள். தமிழகத்தை பொறுத்த வரை, திமுக அரசு அனைத்து விதங்களிலும் பாரபட்சமாகவே நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 8 ஆண்டுகளில் மக்களுக்கான நலத்திட்டங்களை பல மடங்கு வழங்கியுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதைக் காட்டிலும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் துவங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்து துவக்கப்பட்டது. அவை அனைத்தும் தற்பொழுது மருத்துவ
கல்லூரிகளாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதே அதற்கு சாட்சியாகும். எனவே
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அதிமுக, திமுக அல்லது பிற கட்சிகள் என்கின்ற
எந்தவித கட்சி பேதமும், பாரபட்சமும் இன்றி இந்திய நாட்டின் மக்கள் என்ற
நிலையில் திட்டங்களை வழங்கி வருகிறது.

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல எந்த நிலையிலும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் மேற்கொள்ளும் ஆய்வுகள், மக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த நெருக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.