கால்பந்து விளையாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் எத்தனை வீரர்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே சென்றாலும், ஒரே ஒரு பெயர் மட்டும் அதில் பிரகாசமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அந்த பெயர் தான் ’டியாகோ மரடோனா’. அந்த கால்பந்து ராட்சசனின் வரலாறை சற்று திரும்பிப் பார்க்கலாம்…
அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த தீவைக் கைப்பற்றுவதற்கு இங்கிலாந்துக்கும் அர்ஜெண்டினாவுக்கு இடையே கடும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. 1986ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் அவ்விரு அணிகளும் மோதின. ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த அந்த போட்டியில், ஒற்றை ஆளாய் அர்ஜெண்டினாவுக்கு வெற்றியை தேடி தந்தார் அந்த ஒப்பற்ற வீரர்.
களத்தில் நடு பாதியில் இருந்து, 5 வீரர்களை தாண்டி அவர் அடித்த கோல், 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு அடுத்தநாள், பிரான்ஸின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியில் இவ்வாறு எழுதி இருந்தது.
’மரடோனோ – ஒரு பாதி தேவதூதன்… மற்றொரு பாதி சாத்தான்….’
அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர் மரடோனா. அவருக்கு 3 வயதில் பரிசாக கிடைத்த கால்பந்து அவரை விடாப்பிடியாய் பற்றிக்கொண்டது. வயதுக்கு மீறிய திறமைகளைக் கொண்டிருந்த மரடோனாவுக்கு தொட்டதெல்லாம் வெற்றியே. கிடுகிடுவென உச்சம் தொட்ட அவருக்கு 16ம் வயதிலேயே சர்வதேச போட்டிகளில் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், 1978ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில், மரடோனாவின் வயதை காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
உலகக்கோப்பையில் தனது நாட்டிற்காக ஆடுவதையே கனவாய் கொண்டிருந்த அந்த இளைஞன், சில ஆண்டுகளில் உலகின் மிகச்சிறந்த வீரராக மெருகேறினார். 1982 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்தபோதும், 1986ல் நடந்த உலகக்கோப்பை மரடோனாவை என்றென்றும் நிலைத்து நிற்கும் பெயராக மாற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி போட்டியில் அவர் ஆடிய பேயாட்டம், மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது. பெரிதாக சிறந்த வீரர்களைக் கொண்டிராத அர்ஜெண்டினா அணி, மரடோனா என்ற ஒற்றை ஆளுமையின் கீழ் அந்த கனவு கோப்பையை தனதாக்கியது.
ஆனால், அதன்பிறகான காலங்கள் மரடோனாவின் கருப்பு பக்கங்களாக மாறின. கோக்கைன் எனும் போதைப்பொருளுக்கு அடிமையன மரடோனா, தனது உடல்நலனை பேணாமல், சிக்குண்டு சிதறிப்போனார். 1994 உலகக்கோப்பையின்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்ததால், 15 மாதங்கள் அவர் கால்பந்து விளையாட தடைவிதிக்கப்பட்டது.
மரடோனாவின் கால்பந்து அத்தியாயத்தின் இறுதி பக்கங்களில், சோகத்தின் குரலே ஒலித்தது. அவர் ஓய்வு பெற்ற பிறகு, அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அதிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. இருப்பினும், 20ம் நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக மரடோனாவையும், பிரேசில் ஜாம்பவான் பீலேவையும் தேர்ந்தெடுத்து புகழாரம் சூட்டியது ஃபிஃபா.
தனது புகழின் உச்சியையும். வீழ்ச்சியையும் ஒருங்கே சந்தித்தவர் மரடோனா. மரடோனாவைப் போல் இன்னொருவரை இந்த உலகம் இனி காணுமா என்பதும் ஐயமே. அவருக்கு பிரெஞ்சு நாளிதழ் எழுதிய சொற்றொடர் இன்றும் பொருந்துகிறது. அவர் பாதி தேவதூதன்… மற்றொரு பாதி சாத்தான்…







