திமுகவினர் தில்லுமுல்லு செய்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில் விடியா திமுக ஆட்சி மக்கள் விரோத ஜனநாயக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். அதே வகையான ஜனநாயகப் படுகொலையை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் திமுக அரங்கேறியது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள், இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த திமுக ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கத் தொடங்கியது. திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் இச்சூழ்நிலையில் ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால் கழகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், திமுகவினர் பனநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.
அண்மைச் செய்தி : 60 ஆண்டுகால நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ
அராஜகங்களுக்கும், பாசிச நடைமுறைகளும் என்றென்றும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்காது. விரைவில் வீழும். மக்கள் நலன் காக்கும் ஜனநாயக போர்க் களத்தில் தொடர்ந்து உழைப்பை கொடுத்து எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கான மன உறுதியை மக்களின் வாக்குகள் நமக்கு கொடுத்திருக்கின்றன. இவ்வாறு தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.







