திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வராததன் மூலம் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட முடியவில்லை என்பது நிரூபணமாகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னமான வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் சர்வதேச யோகா தினம் இன்று நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் பெறுவதற்கான அடிப்படை யோகா ஆசனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்சியில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக பாஜக 30 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். நேற்று திருவாரூரில் முதலமைச்சர் பங்கேற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், பிஹார் மாநிலத்தின் முதலமைச்சருமான நிதீஷ் குமார் நிகழ்ச்சிக்கு வருகை தராதது அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட முடியவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. இதுவே திமுக ஆட்சியின் வீழ்ச்சியை காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டு திமுக அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்திக்கும். மக்கள், திமுக ஆட்சி மீது சமீப காலமாக அதிருப்தியில் உள்ளனர். யாரும் திமுக ஆட்சியை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதை மறைப்பதற்காக ஸ்டாலின் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவமனையாக விளங்கும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறாதது மக்களுக்கு திமுக ஆட்சியின் மேல் உள்ள நம்பிக்கையை குறைக்கும் விதமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவருடைய சகோதரர் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியும் அவர் கால அவகாசம் கேட்டிருப்பது தமிழகத்தில் உள்ள மனித உரிமை ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை என்பதையும், அது திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதாகவும் கூறிய அவர், திமுக அரசு எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா