“தமிழகத்தை பயங்கரவாதத்தின் புகலிடமாக்கிய திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழகத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வெளிக்கொணர்ந்து, தேச நலனைக் காக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிடுவதோடு, பயங்கரவாதிகளுக்கு உளவு பார்த்து வந்த வங்கதேசத்தவர்கள் ஆறு பேரை திருப்பூரில் டெல்லி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து திருப்பூர், கோவை போன்ற கொங்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதையும், பின் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் பிற மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதையும் உற்று நோக்கையில், திமுக அரசின் ஏவல்துறையினர் தேசப் பாதுகாப்பில் மெத்தனம் காட்டி வருவது தெளிவாகப் புலனாகிறது.

மத்திய அரசின் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்வது மலினமானது என்பதை அறிவாலயம் அரசு உணர வேண்டும்! ஆட்சியின் இறுதிகட்ட நாட்களிலாவது தமிழகத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வெளிக்கொணர்ந்து, தேச நலனைக் காக்க வேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.