சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறுவதால், நேற்று முதலே பொதுக்குழு நிர்வாகிகள் சென்னை வரதொடங்கினர்.   சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்…

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறுவதால், நேற்று முதலே பொதுக்குழு நிர்வாகிகள் சென்னை வரதொடங்கினர்.

 

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இதில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். மேலும் பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர்.

 

அதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு தமக்கு வழங்கிடும் சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில், திமுகவின் துணைப் பொது செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பார். மேலும் தணிக்கை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை வாழ்த்தி திமுக முன்னோடிகள் உரையாற்றுவார்கள். இந்த பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார். இன்று நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர் 2,600 பேர், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

அவர்கள் நேற்று முதல் சென்னை வர தொடங்கினர். பொதுக்குழுவில் 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் அரங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் போன்று தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.