ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு மனு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021ல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளனர்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி ஆர் பாலு விடுத்துள்ள அழைப்பில்,
ஒரே எண்ணம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழக ஆளுநரை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் அண்ணா அறிவாலய தலைமையகத்திற்கு நேரில் சென்று படித்து கையொப்பமிடுமாறு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.







