2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுகவும், காங்கிரஸ்-சும் இடம்பெற்றுள்ள INDIA கூட்டணி கைப்பற்றும் என கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆட்சிகாலம் நிறைவடைவதை ஒட்டி இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை INDIA – கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது.
இந்நிலையில், ‛மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு டிச.,15 முதல் 2024 ஜன.,28 வரை 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.
‛இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நடத்திய இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் பின்வருமாறு:
தமிழகத்தில் 2019ல் திமுக, காங்கிரஸ் கூட்டணி 53 சதவீத ஓட்டுகள் பெற்ற நிலையில், வரும் தேர்தலில் 47 சதவீத ஓட்டுகள் பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல், முந்தைய தேர்தலில் தே.ஜ., கூட்டணி தமிழ்நாட்டில் 12 சதவீத ஓட்டுகள் பெற்றது. வரும் தேர்தலில், ஓட்டு சதவீதம் சற்று அதிகரித்து அக்கூட்டணிக்கு 15 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கக்கூடும். கடந்த தேர்தலில், பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, தற்போது விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற கட்சிகளை பொறுத்தவரை 2019-ல் 35 சதவீத ஓட்டுகளை கைப்பற்றின. இந்நிலையில் வரும் தேர்தலில் அக்கட்சிகளுக்கு 38 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த தேர்தலில் INDIA கூட்டணி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.







