நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்; 1.50 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக 16,888 பேருந்துகளை இயக்க தமிழக…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக 16,888 பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளியையொட்டி நாளை முதல் 23ம் தேதி வரையில் வழக்கமான பேருந்து சேவைகளுடன் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை தினத்தில் இருந்து அக்டோபர் 26ம் தேதி வரையில் 13,152 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அரசு பேருந்துகளில் பயணிக்க சென்னை கோயம்பேட்டில் முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் ஒரு மையமும் என 11 மையங்கள் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை இயக்கப்படும்.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இந்த சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் பலரும் முன்கூட்டியே சிறப்பு பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டனர்.

மேலும் அரசு பேருந்துகளின் இயக்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.