காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைந்து போற்றும், காசி-தமிழ் சங்கமத்தை தமிழக பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை டெல்லியில், தமிழ் மக்களை எல்லாம் மகிழ்ச்சி உற்சாகம் கொள்ளச் செய்யும் வகையில், மத்திய அரசின், கல்வி அமைச்சகத்தின் சார்பில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில், வாரணாசியில், வரும் கார்த்திகை மாதம், காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைந்து போற்றும் காசி – தமிழ் சங்கமம் நடைபெற இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்மொழியின் மாண்புகளை, தமிழ் பாரம்பரிய பெருமைகளை, தமிழ் கலாச்சார அருமைகளை, விளக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 16 நவம்பர் முதல் 16 டிசம்பர் வரை நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம் உறுதியான பாரதம் என்ற முழக்கத்திற்கு மேலும் ஊக்கத்தையும் வலிமையையும் சேர்க்கும். வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு, ஓர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வு குறித்த தகவல்களை, இன்று மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://www.kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் அனைவரும் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின், தமிழ்மொழியின் பாரம்பரிய கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி, போன்ற 12 பல்வேறு துறைகளை சார்ந்த தமிழர்கள், துறைக்கு 200 பேர் என்ற வகையில், சுமார் 2400 பேர் காசிக்கு ரயில் மூலம் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து செல்லப்படுவர். இவர்கள் சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் ரயில்களில் காசிக்கு செல்ல இருக்கின்றனர். தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்கள், தங்களைப் பற்றிய ஆவண குறிப்புகளுடன் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நம் பிரதமர் நரேந்திர மோடியின், இதயம் கவர்ந்த மொழி நம் தமிழ் மொழி. நான் தமிழனாக பிறக்கவில்லையே, நான் சரளமாக தமிழ் பேச முடியவில்லையே என்று அவர் பொதுக்கூட்டங்களில் தன் உள்ளத்தின் உணர்வுகளை, தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
நம் பாரத பிரதமரின் இதயம் கவர்ந்த நம் தாய்மொழி தமிழ் – தமிழ்நாடு மற்றும் அவரின் மக்களவை தொகுதியான வாரணாசி ஆகிய இரண்டையும் இணைப்பதில், நூற்றாண்டுகளைக் கடந்த உறவுப்பாலத்தை மீண்டும் உறுதி செய்வதில், நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று மத்திய அரசு தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டிருக்கும் வாஞ்சையை வெளிப்படுத்தி இருக்கிறது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு
ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்.” என்ற திருக்குறள் செப்பிய சமத்துவத்தை, இந்த அருமையான நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் மூலம், நம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருக்கிறார். தமிழ் மொழியின் தமிழ் மக்களின் பெருமைகளையும், நாடறிய செய்யும், இந்த நல்ல முயற்சியை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.