திருப்பூர் அருகே அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகளையும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவிலான விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கம்.
இதில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர். பாரம்பரியமான சிறு தானிய உணவு வகைகள், திருமணமான புதுமண தம்பதி எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு, குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள், எள் உருண்டை, சிறுதானிய பாயாசம், கடலை உருண்டை, சத்துமாவு பாயாசம், காய்கறி சூப் போன்ற உணவுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக வட்டார அளவிலான போட்டியிலும் அதில் வெற்று பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற அழைத்துச் செல்லப்படுவர் என மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
—- அனகா காளமேகன்







