திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த 16 இலங்கைத் தமிழர்களை விடுவிக்க கோரி, கடந்த 40 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாவட்ட நிர்வாகம் விடுதலை செய்துள்ளது.
திருச்சி மத்தியச் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணம் செய்தது, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது போன்ற குற்றங்களுக்காக சுமார் 100க்கும் அதிகமான தண்டனை குற்றவாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களுக்குத் தமிழ்நாடு அரசு விடுதலை அளிக்கவில்லை எனக் கூறி கடந்த 40 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், முகாம் வாசிகளிடம் கலந்துரையாடி, விடுதலைக்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், முகாம் வாசிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் அப்போது கூறினார். இந்த நிகழ்வின்போது, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.
அண்மைச் செய்தி: ‘இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் மது வேண்டுமா?’

விடுதலை செய்யப்பட்டவர்களின் விபரம்: மன்னார் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், பிரான்சிஸ் சேவியர், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த நிருபன், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ரீகன், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், கிளிநொச்சி பாலாறு அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த திலீபன், கிளிநொச்சி இராணிப்பேட்டை அகதி முகாம் பகுதியைச் சேர்ந்த எப்சிபன், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், சேலம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரிஜிபன், ஈரோடு அகதி முகாமிலிருந்த மதன் குமார், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருபரசா, மன்னார் பகுதியைச் சேர்ந்த டேவிட் ராஜன் கிளிநட்சி பகுதியைச் சேர்ந்த நகுலேஷ் யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்த செளந்தர்ராஜன்.







