சோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: பெ.சண்முகம் கண்டனம்!

டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சூக் கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் மற்றும் பிற தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுமப்படு வந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை டெல்லி போலீசார் இன்று கைப்பற்றி மருத்துவமனியில் அனுமதித்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவரகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசு, அதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜகக் கைதுகள் மூலமும் நசுக்கப் பார்க்கும் இந்த ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கல்வி அமைச்சரின் தோல்வியை மறைக்கப் போராடுபவர்கள் மீது ஏவப்படும் இந்த கோழைத்தனமான அடக்குமுறைக்கு எதிராக, நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகச் சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும். ஜந்தர் மந்தரிலிருந்து எழப்போகும் இந்த உழைக்கும் வர்க்க இளைஞர்களின் புரட்சிப் பேரலை, உங்கள் அதிகாரச் சிம்மாசனத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கித் தகர்க்கும்! அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!, தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலகு!” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.