தீபாவளி பட்டாசு தகராறு? குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படை வீரர் மீது துப்பாக்கிச் சூடு!

உத்தரப் பிரதேசத்தில் தீபாவளி இரவில் பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. இதில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் 26 வயது ராணுவ வீரர் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்த ராணுவ வீரர் சவுரப் தோமர் (26), மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறு!

காவல்துறை மற்றும் அப்பகுதி மக்களின் தகவலின்படி, தீபாவளி இரவில் சவுரப் தோமர் தனது சகோதரர்கள் வினீத் மற்றும் மிண்டு ஆகியோருடன் வீட்டின் வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த தீரஜ் மற்றும் அவரது சகோதரர் மோனு என்கிற பிரவீண் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியுள்ளது. அப்போது தீரஜ் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் துப்பாக்கிக் குண்டு முதலில் சுவரில் பட்டு, பின்னர் சவுரப் தோமரின் காதுக்குப் பின்புறம் தலையில் பாய்ந்துள்ளது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதற்கிடையே, தீரஜின் சகோதரர் மோனு அங்கு வந்து வினீத்தை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில் மிண்டு, மோனுவை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சத்தில் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வீரர்!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சவுரப் தோமர், கடந்த 2021-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படையில் (President’s Bodyguard) பணியாற்றி வருகிறார். இந்திய ராணுவத்தின் பழமையான மற்றும் மூத்த குதிரைப்படைப் பிரிவாகக் கருதப்படும் இந்தப் படையில் பணியாற்றும் சவுரப், தீபாவளி பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.

அறுவை சிகிச்சையில் குண்டு அகற்றம்!

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சவுரப்பை அவரது குடும்பத்தினர் உடனடியாக பரோட்டில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவக் கல்லூரிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், குடும்பத்தினர் அவரை மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது தலையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டை வெற்றிகரமாக அகற்றினர். இருப்பினும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

இந்தச் சம்பவம் குறித்து சவுரப்பின் தந்தை ஜனக் ராஜ் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். பரோட் காவல் வட்ட அதிகாரி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தீரஜ் மற்றும் அவரது சகோதரர் மோனு ஆகியோரைத் தேடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.