4 ரூபாய்க்கு தகராறு; குடிபோதையில் கடைகாரர் காதை கடித்த போலீஸ்

குடிபோதையில் காவலர் ஒருவர், வாங்கிய சிகரெட்டுக்கு “நான்கு ரூபாய்” பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதோடு கடையிலிருந்த வாலிபரின் “காதை கடித்த” சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து…

குடிபோதையில் காவலர் ஒருவர், வாங்கிய சிகரெட்டுக்கு “நான்கு ரூபாய்” பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதோடு கடையிலிருந்த வாலிபரின் “காதை கடித்த” சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம்.

இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக கடையை கவனித்து வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்டம் கீதக்காதியைச் சேர்ந்த முகமது ஆஷிக் என்பவர் சிவசெல்வத்தை எழுப்பி சிகரெட் வேண்டும் என கேட்டுள்ளார். செல்வசிவா நான்கு சிகரெட்களை கொடுத்து விட்டு 54 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த ஆஷிக் தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு காலையில் வந்து பணம் தருவதாக கூறியுள்ளார். செல்வசிவாவும் சரி என கூறிய நிலையில் சிறிது நேரத்தில் முகமது ஆசிக் பேடிஎம் மூலம் 50 செலுத்தினார். மீதம் நான்கு ரூபாயை செல்வ சிவா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் paytm ஸ்கேனரை காண்பிக்குமாறு முகமது ஆசிக் கேட்க செல்வசிவாவும் பேடிஎம்
ஸ்கேனரை எடுத்து காட்டியுள்ளார்.

 

அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக் கொண்ட காவலர் செல்வசிவாவின் மீது தூக்கி எறிந்ததில் செல்வ சிவாவின் தலையில் காயம் ஏற்பட்டது. மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலர் கடையிலிருந்து வெளியே வருமாறு செல்வசிவாவை அழைக்க, வெளியே வந்த செல்வசிவாவை தாக்கியோது அவரது காதை கடித்தார். இதனால் வலியால் துடித்த செல்வசிவா உடனிடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவலரை அவரது நண்பர்கள் அழைத்துச்சென்றனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த செந்தில்குமார் தனது மகனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்கள் செல்வ சிவாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் முகமது ஆசிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விசாரணையில் வெரும் 4 ரூபாய் பணத்திற்காக கடைக்காரரின் காதை கடித்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிக் (24) என்பதும், அவர் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4 ஆவது பெட்டாலியனில் காவலராக பணியாற்றி வருவதும், மது போதையில் பெட்டிகடையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து காட்டூர் போலீஸார் முகமது ஆசிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.