உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவனின் உடலை வாங்கிய பெற்றோர் வட்டாச்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் கடந்த 6 தினங்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்ட சூழலில், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தான் அதற்கு காரணம் எனக் கூறி சீனுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழலில் மாணவனின் தந்தை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தனது மகன் மரணம் குறித்து உரிய முறையில் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த சூழலில் மாணவனின் உடலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கிய நீதிபதிகள் மாணவனின் உடலை பெற்றோர் பெற்று இன்று உரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சீனுவின் உடலை முறைப்படி அவரது பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சீனுவின் உடலானது போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு, கடையநல்லூர் வட்டாட்சியர் சண்முகம் முன்னிலையில் சீனுவின் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மாவட்ட போலீசார்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.