கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் காவல் ஆய்வாளர் அவரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்தார். பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊர் தலைவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இன்று தர்ணாவில் அமர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தர்ணாவில் அமர்ந்த தனலட்சுமியிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அப்பெண் தர்ணாவை முடித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்களிடம் மனு அளிக்க சென்றார்.
அப்போது வாசலில் இருந்து வேகமாக வந்த கோவை பந்தய சாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார் தனலட்சுமியின் மனுவை வாங்கி பார்த்தார். பின் அவரது மனு நியாயமானது எனத் தெரிவித்த சாந்தகுமார், ”தேவையில்லாம உட்கார்ந்தா ரிமேண்ட் பண்ணிப்போடுவேன் ஜாக்கிரதை. உன்ன மாறி ஆயிரம் பொம்பளைகளை பார்த்திருக்கேன் போ” என ஒருமையில் மிரட்டினார். இதற்கு பின் வந்த மற்றொரு பெண் ஆய்வாளர் தனலட்சுமியின் கையை பிடித்து இழுத்தார். அப்போது அவர் நிலை தடுமாறினார். இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவரை காவல் துறையினர் மிரட்டுவதாக மாற்றுத்திறனாளி தனலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.







