தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காக தண்டவாளம் அருகே வீடியோ எடுத்த பள்ளி மாணவர் ரயில் மோதி உயிரிழந்தார்.
ரீல்ஸ், செல்பி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், சனத் நகரைச் சேர்ந்தவர் முகமது சாதிக். இவரது மகன் முகம்மத் சர்ப்ராஸ். 16 வயதான இச்சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று சிறுவன் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு இருக்கிறான்.
பின்னர் தனது நண்பர்களான முசம்மில் மற்றும் சோஹைல் ஆகியோருடன் அங்குள்ள, ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்ய ரயில் வரும்போது தண்டவாளத்திற்கு அருகில் இருந்து வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதையடுதது, சிறுவன் தண்டவாளத்திற்கு மிக நெருக்கமாக சென்ற நிலையில், அவ்வழியே வந்த ரயில் சிறுவனின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்ததும் முகம்மத்தின் நண்பர்கள் அவரின் வீட்டிற்கு சென்று சிறுவனின் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளனர். ரயில் ஓட்டுநர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ரயில்வே காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








