இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வெளியாகவுள்ள ‘மன்மத லீலை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆக்ஷன், காமெடி என தமிழ் சினிமாவில் தனக்கான பாணியில் இயங்கி வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. கடைசியாக நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கிறார்.
இந்நிலையில் நேற்று வெளியான ட்ரைலர் காட்சியில் இடம்பெற்ற சில காட்சிகள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் ‘மாட்டிக்கொள்ளாத வரை எல்லா ஆண்களும் இராமர்களே’ என்ற வசனம் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. அதனை இணையத்தில் நெட்டிசன்கள் தற்போது வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த வசனத்தை வைத்து ‘ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் கெட்டவர்கள் என்று தீர்மானித்து விட்டாரா இயக்குநர்’? என்று ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும், மற்றொரு தரப்போ முரட்டு சிங்கிள் மற்றும் அப்பாவிகளான 90s கிட்ஸ்கள். அவர்கள் தரப்பில் இன்ஸ்டாகிராமில் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், ‘நாங்களாம் இன்ஞினியரிங் படிச்சோம் எங்களுக்கும் காதலாம் இருந்தது ஆனால் வேலை இல்லை, குடும்பத்தை காப்பாத்தணும் என்பதால் பொறுப்புடன் அனைத்தையும் துறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களையும் சேர்த்து இயக்குநர் சொல்வது ரொம்ப தப்பு ப்ரோ’ எனத் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். ‘ஏற்கனவே கடந்த லாக் டவுனில் கல்யாணம் முடித்து வெறுப்பேற்றிய 2k கிட்ஸ்கள் மத்தியில் எங்களை மீண்டும் மீண்டும் இவ்வாறு பழிப்பது மிகவும் தவறு’ என ஜாலியாகவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். டான்களை வைத்து இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு ஏன் இந்த வேண்டாத வேலை என எப்போதும் போல ஒரு தரப்பினர் அறிவுரையும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது, திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட ஜாலியான படமாக இது இருக்கும். இது 80களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு’ படத்தின் நவீன வடிவமாகவும், ஆடியன்ஸுக்கு ஒரு புதிவித திரைக்கதை அனுபவமாகவும் இப்படம் இருக்கும் என்று தெரிவித்திருந்துள்ளார். வெறும் வாயிலே மெல்லும் 90s கிட்ஸ்கள் மத்தியில் அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– மா.நிருபன் சக்கரவர்த்தி







