மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார் இயக்குனர் சுந்தர்.சி – புதியநீதி கட்சி சார்பில் போட்டி!

மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி புதியநீதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில், அதிமுக 167, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம், நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.