இயக்குனர் அமீரின் தாயார் மறைவு; பிரபலங்கள் இரங்கல்
பிரபல நடிகரும், இயக்குநருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு இறுதி சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு இயக்குனர் அமீர் ஹஜ் புனித பயணத்திற்கு சென்றுள்ளார்.
அமீர் தாயார் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய போராளி தம்பி அமீர் அவர்களின் தாயார் மறைவு செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அன்னை அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அருமை இயக்குனர் மண்ணின் மைந்தர் திரு,அமீர் அவர்களின் தாயார் மறைந்த செய்தியறிந்தேன். அம்மாவிற்கு இதய அஞ்சலி என இயக்குனர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார் அன்பிற்குரிய அம்மா பாத்துமுத்து பீவி அவர்களது மறைவுச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப்பேரிழப்பாகும். தம்பி அமீர், சகோதரர்கள் ஜமால் முகமது, இமாம் ஹூசைன், சேக் மன்சூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் அமீர் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.









