இஸ்லாம் மதத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குநர், தனது மனைவியுடன் இந்து மதத்துக்கு மாறுவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அக்பர் அலி. சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள இவர் பாடல்களும் எழுதி இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கொடுவள்ளி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். பிறகு அந்தக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்த அவர், கடந்த அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை சிலர் கொண்டாடியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அக்பர் அலி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். தேசத்துக்கு எதிரானவர்களுடன் இனி நிற்கப் போவதில்லை என்றும் தனது மதத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் இஸ்லாம் மதத்தில் இருந்து விலகி, தனது மனைவி லூசியம்மாவுடன் இந்து மதத்துக்கு மாறப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பெயரை ராம் சிங் என மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவின் கலாச்சாரத்தை கடைபிடித்ததற்காக கொல்லப்பட்டவர் ராம சிம்மன் என்றும் அவர் பெயராலே இனி ராம்சிங் என்று அழைக்கப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 1947 ஆம் ஆண்டு, இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மாறியதற்காக கொல்லப்பட்டவர் ராம சிம்மன். அவரோடு அவர் சகோதரர் தயாசிம்மன், தயாவின் மனைவி கமலா, சமையல்காரர் ராஜூ அய்யர் ஆகியோரும் அப்போது கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








