இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும், வாடிவாசல் திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த ’அசுரன்’படத்தை இயக்கிய வெற்றிமாறன், அடுத்து சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. வாடிவாசல் திரைப்படம் விடுதலைப் படத்திற்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டார் வெற்றிமாறன்.
விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த வேலைகள் எல்லாம் முடிந்து விடுதலை படத்தின் இரண்டாம பாகம் வெளியாவதற்கு இந்த ஆண்டு இறுதியை எட்டிவிடும் என்பதால் மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
இருந்தும் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர். சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருதரப்பினரிடையேயும் உள்ள சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது. இந்நிலையில், வாடிவாசல் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








