முக்கியச் செய்திகள் தமிழகம்

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை

உறியடி திருவிழாவை முன்னிட்டு திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைநம்பி கோயில், திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.

இதில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோயிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 4 கி.மீ.தூரம் பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கோயிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 2ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மூடப்பட்ட திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் ஜூலை 9ம் தேதி திறக்கப்பட்டது. கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீயினால் இடம் பெயர்ந்த யானைகள், நம்பி கோயில் சாலையில் உலா வந்தததையடுத்து ஆகஸ்டு 1ம் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது.

பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்ட நிலையிலும் நம்பி கோயில் இன்னும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து தடைநீடிப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் உறியடி திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்தாண்டு விழா வரும் 11ம் தேதி இந்த திருவிழா நடத்தப்பட வேண்டும். எனவே மூடப்பட்டுள்ள திருமலைநம்பி கோயிலை கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்றும், உறியடி திருவிழா நடத்தவும் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

அதிமுக- அமமுக இணைய வாய்ப்பு கிடையாது: ஜெயக்குமார்!

Niruban Chakkaaravarthi

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

Saravana Kumar