சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டுசதுரகிரி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயில்…

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு
பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்படும். சித்திரை மாத பிரதோஷம் மற்றும் வரும் ஏப்19ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ள அமாவாசை சிறப்புப் பூஜைக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இன்று முதல் வரும் ஏப் 20 ந்தேதி வரை நான்கு நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.காய்ச்சல் சளி,இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

10 வயதுக்குள் உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்கிக் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது கோடைக்காலம் என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல கூடாது எனவும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.மேலும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.