திருமணம் செய்துகொள்ள விருப்பம் தான். ஆனால் எனக்கு ஏற்றவாறு சரியான பெண் அமைய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரசு எம்பியான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
51 வயதான ராகுல் காந்திக்கு இன்னும் திருமணமாகவில்லை. அரசியல் களத்தில் பயணிப்பவர்களில் திருமணமாகாத மிகச் சொற்பமான நபர்களில் ராகுலும் ஒருவர். ராகுல் காந்தியின் திருமணம் தொடர்பான விவாதங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் பேசப்படுகின்றன.
இந்நிலையில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் தொடர்பாக எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தனியார் யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் காமியா ஜெனி ராகுலிடம்
”நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்ய விருப்பம் இல்லையா அல்லது உங்களது விருப்பப் பட்டியலில் திருமணம் உள்ளதா? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி “ எனக்கு ஏற்றவாறு சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். திருமணத்திற்கு நான் எதிரானவன் இல்லை. எனது பெற்றோர் காதல் திருமணம் செய்துகொண்டதால் எனது திருமணத்திற்கான அளவுகோல் உயர்ந்துவிட்டது. எனக்கு வரக்கூடிய பெண் அன்பானவராகவும், அறிவார்ந்த நபராகவும் இருக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.







