திருவாரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, டீசர்ட் பரிசளித்து, ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
ஹெல்மெட் அணிவதால் அது நம்முடைய தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதற்கு ஏற்ப இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தமிழகத்தில் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக 52-வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் டீ சர்ட் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல் துறை ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டீ சர்ட்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்திருந்த இருச்சகரை வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒன்றாக வந்த இரு பெண்களும் ஹெல்மெட் அணிந்து வந்தனர். அவர்களையும் நிறுத்தி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த நிகழ்வானது பொதுமக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தியதோடு, வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








