திருச்சியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
திருச்சி காஜாமலையில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி உரிமத்தை கல்லூரி கல்வி இயக்குனரகம் ரத்து செய்ததாக இன்று காலை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அங்கீகாரம் ரத்து என்பதில் உண்மை தன்மை இல்லை என்றும். இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்று கூறினார்.
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்த நிலையில், நவம்பர் 2022ல் முறைப்படி புதுப்பித்தல் செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும், விரைவில் தங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உத்தரவு வெளிவரும் என்றும் கூறினார். மேலும் உயர் கல்வித்துறை கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து இது போன்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்றும் முதல்வர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
இது குறித்து நியூஸ்7 தமிழக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அளித்த பேட்டியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்தை எப்போதும் ரத்து செய்ய வாய்ப்பே இல்லை. திருச்சி காஜாமாலையில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








