முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

”புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது” – தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

”புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது” என தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையை முன்னிட்டு சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையின் சோதனை நடத்தினர்.

தலைமைச் செயலகத்தில் நடந்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது…

”தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன.

இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயார்’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜியே பேட்டியும் அளித்துள்ளார். விசாரணை நடைபெறும் இடத்தில் இருந்து முழு ஒத்துழைப்பைத் தந்து வருகிறார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.

மத்திய  உள்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில் உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்? பொதுமேடைகளில் தி.மு.க.வையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துச் சென்றார் மத்திய அமைச்சர். அதற்குத் தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும்.

ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?

கடந்த அதிமுக ஆட்சியில், 2016-ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ்  வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. “தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு – கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது மத்திய அரசு. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது” என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க. உருவாக்கி வருகிறது.

பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப்பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

25000 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் உபர்

Web Editor

டெல்லி பயண சர்ச்சை; இபிஎஸ்ஸை சந்தித்த ராஜேந்திரபாலாஜி

G SaravanaKumar

சாதி, மத பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading