அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதே போல சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி “அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என தெரிவித்திருந்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்திற்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் சென்றனர். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அவர்களை அனுமதிக்கவில்லை. இதனையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் திட்டமிட்டு சோதனை நடத்தப்படுகிறது. அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமைச்சர் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க வேண்டும் என அமலாக்கதுறை அதிகாரிகளிடம் கூறினோம். அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
சேலத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமித்ஷாவை நோக்கி பல கேள்விகளை கேட்டார், அதற்கு அமித்ஷா ஒரு பதில் கூட அளிக்கவில்லை. மாறாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு சென்னையிலும் வேலூரிலும் பேசி விட்டு சென்றிருக்கிறார்.” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.







