சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய விவகாரம் – மன்னிப்பு கோரினார் டி.கே.சிவகுமார்!

கர்நாடக சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டமன்றத்தில்  பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே  ஏற்பட்ட கூட்ட நெரிசல் பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போது  பாஜகவினர் பெங்களூர் கூட்ட  நெரிசல் விபத்து தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை விமர்சித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய  டி.க.சிவகுமார் திடீரென பாஜகவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சின்  கீதமான ‘நமஸ்தே சதா வத்சலே’ பாடலை பாடினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து டி.க.சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் சின் பாடலை பாடியது பேசுபொருளானது. இந்த நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார் இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அவர் பேசியது,

“நான் பாஜகவினரை விமர்சிப்பதற்காகவே நான் அப்பாடலை பாடினேன். ஆனால், அதனை அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டு சிலர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன். ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகளில் என்னை பின்தொடர்பவர்களும் நண்பர்களும் உள்ளனர். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.