பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் போஸ்டர்களை மக்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், மாவட்டம் தோறும் ’சமாதான் யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை நேற்று தொடங்கிய நிலையில், வரும் 7ம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், சமாதான் யாத்திரை மேற்கொண்டு வரும் நிதிஷ் குமார், இன்று பீகாரின் கத்திஹார் மாவட்டத்தை வந்தடைந்தார். அங்குள்ள திஹாரி பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குறைகளை முதலமைச்சரிடம் முறையிடுவதற்காக பல மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தினர்.







