அன்பே வா-சென்டிமென்டை தகர்த்த எம்ஜிஆர்…!

வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், களத்தூர் கண்ணம்மா என தனது வாழ்நாளில் 167 திரைப்படங்களைத் தயாரித்தவர் ஏ.வி. மெய்யப்பன். சிவாஜியின் முதல் திரைப்படமான பராசக்தியை இணைந்து தயாரித்த அவர், அப்போதைய…

வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், களத்தூர் கண்ணம்மா என தனது வாழ்நாளில் 167 திரைப்படங்களைத் தயாரித்தவர் ஏ.வி. மெய்யப்பன். சிவாஜியின் முதல் திரைப்படமான பராசக்தியை இணைந்து தயாரித்த அவர், அப்போதைய சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆரை நடிக்க வைத்து ஒரு திரைப்படத்தை கூட தயாரிக்கவில்லை.

முதன்முதலாக வண்ணப்படம் தயாரிக்க எண்ணிய ஏவிஎம், தனது மகன் சரவணன் விருப்பப்படி எம்ஜிஆர் நடிக்க அன்பே வா திரைப்படத்தை தயாரித்தார். COME SEPTEMBER என்ற ஆங்கில திரைப்படத்தை தழுவி தயாரிக்கப்பட்ட அன்பே வா திரைப்படம், எம்ஜிஆர் படத்திற்கு ஏற்றபடி, அம்மா சென்டிமென்ட், கதாநாயகனை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாநாயகி என கதையமைப்பும் இல்லாமல் தயாரிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தில் கதாநாயகன்தான் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிப்பார். எம்ஜிஆருக்கு அப்பா அம்மா கதாபாத்திரங்களே இல்லாததால், உருகவேண்டிய காட்சிகளும் இல்லை… ஆனாலும் வெற்றி பெற்றது அன்பே வா.

தனது படங்களின் வெற்றி ஃபார்முலா எதுவும் இல்லாத போதும் எம்.ஜி.ஆர் இந்த படத்தினை ஒப்புக்கொள்ள ஒரே காரணம் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மீது அவர் கொண்ட நம்பிக்கை… அன்பே வா திரைப்படத்தின் வெற்றி அதை உறுதிப்படுத்தியது.
திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய எம்.ஜி.ஆர், ‘என்னை நான் ஏ.சி.டியிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடத்தயாராக இருந்தேன்’ என மனம்விட்டு பாராட்டினார்.

கதை சொல்லும்போது எம்ஜிஆரின் முகத்தில் புன்னகை தொடர்ந்து தெரிந்தது என்கிறார் திருலோகச்சந்தர். அன்பே வா திரைப்படத்திற்காக 72 நாட்கள் கால்ஷீட் கொடுத்த எம்ஜிஆர் முதலில் சம்பளமாக ரூ. 3 லட்சமும் அதன் பிறகு ரூ.25 ஆயிரமும் பெற்றுக்கொண்டார். ஏவிஎம் நிறுவனத்துடனும், இயக்குநர் திருலோகச்சந்தருடனும் இணைந்து எம்ஜிஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம் அன்பே வா மட்டுமே.

அன்பே வா திரைப்பட கதாநாயகியாக முதலில் ஜெயலலிதா நடிக்க இருந்ததும் பின்னர் சரோஜா தேவி நடித்ததும் வேறு கதை. திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம் பாடல் காட்சியின் ஒரு கட்டத்தில் எழுத்தாளர் சாவி தோன்றியிருப்பார் என்பது தெரிந்திராத செய்தி. சரோஜாதேவியின் தந்தையாக நடிக்க முதலில் தங்கவேலுவை எம்ஜிஆர் சிபாரிசு செய்ய, டி.ஆர் ராமச்சந்திரனை நடிக்க வைத்தார் ஏவிஎம். எனினும் தனது எண்ணத்தை டி.ஆர்.ராமச்சந்திரனிடம் தெரிவிக்க வேண்டாம் என கூறினார் எம்ஜிஆர்.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது எம்ஜிஆர் ஆதிக்கம் செலுத்துவார் எனக் கூறப்பட்ட நிலையில், வழக்கமான கதையமைப்பை விட்டுவிட்டு, மாறுபட்ட திரைக்கதையிலும் நடித்து புகழ்பெற்றார் எம்ஜிஆர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.