பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஆவர். ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து வினீத்திடம் இருந்து பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருத்திகாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படை போலீசார் தற்போது குஜராத் விரைந்துள்ளனர். இந்நலையில் யாரும் எதிர்பாராத வகையில் குஜராத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினர் மேத்ரிக் பட்டேல் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ வெளியிடப்பட்டன. கிருத்திகா பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், தன் விருப்பப்படியே பெற்றோர் உடன் சென்றிருப்பதாக கிருத்திகா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கிருத்திகாவும், வினீத்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. தற்போது மீண்டும் கிருத்திகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், வினீத்தின் குடும்பத்தார் தன்னை வைத்து தன் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதைத் தெரிந்து கொண்டு தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தேன். தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்தேன். அதனால்தான் பெற்றோர் தன்னை அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா









