பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராம சுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.
அதில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவான தீர்ப்பை நீதிபதி பி.வி.நாகரத்னா தவிர மற்ற 4 நீதிபதிகளும் வழங்கினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரம் சார்ந்த விவகாரம் என்பதால், நீதிமன்றம் தனது நிபுணத்துவ அறிவை வைத்து கருத்து கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்ள சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை நீதிபதி பி.வி.நாகரத்னா சுட்டிக்காட்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், உச்ச நீதிமன்ற வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற மாறுபட்ட தீர்ப்புகளில் ஒன்றாக இது இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்கில் ப.சிதம்பரமும் ஆஜராகி வாதிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








