முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

பணமதிப்பிழப்பு வழக்கில் இன்று தீர்ப்பு – 10 முக்கிய தகவல்கள்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த திடீர் நடவடிக்கையால், ஒரே இரவில் ரூ.10 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அதன் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த பணமதிப்பிழப்பு வழக்கு குறித்த 10 முக்கிய தகவல்களை காணலாம்:

1. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடையை எதிர்த்து மொத்தம் 58 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள்  நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் பரிசீலிக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

2. எந்தவித உறுதியான நிவாரணமும் வழங்க முடியாத ஒரு விஷயத்தை, நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று மத்திய அரசு பதில் வாதத்தை முன்வைத்தது.

3. நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு குளிர்கால விடுமுறைக்கு முன் வழக்கின் வாதங்களைக் கேட்டறிந்து, ஜனவரி 2ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா, இரண்டு தனித்தனி தீர்ப்புகளை எழுதியுள்ளனர்.

4. பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு என்றும், கறுப்புப் பணம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கமளித்தது.

5. முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், கள்ளநோட்டு அல்லது கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த, மாற்று வழிகளை மத்திய அரசு ஆராயவில்லை என்று வாதிட்டார்.

6. சட்டப்பூர்வ ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அரசு தானாக முன்வைக்க முடியாது என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

7. மேலும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த முக்கிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், நவம்பர் 7 ஆம் தேதி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய கடிதம் பற்றியும், ரிசர்வ் வங்கியோடு நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் பற்றியும் மத்திய அரசு முழுமையான தகவல் அளிக்கவில்லை என்றும் வாதிட்டார்.

8. பொருளாதாரக் கொள்கை முடிவுகளுக்கு, நீதித்துறையின் மறுஆய்வு பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது, ​​பொருளாதாரக் கொள்கை முடிவு என்பதற்காக, நீதித்துறை கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று நீதிபதிகள் பதிலளித்தனர்.

9. தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் பல தற்காலிக கஷ்டங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

10. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசாங்கத்தின் தோல்வி என்று விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகள், இந்த நடவடிக்கையால் வணிகம் மற்றும் பல்வேறு தொழில்கள் அழிவுற்றதாக குற்றம் சாட்டுகின்றன. புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணம் 2016-ஐ விட 72 சதவீதம் அதிகம் என்றும், பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்த தோல்வியை பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின் பராமரிப்புப் பணிகள் 10 நாட்களில் முடியும்: செந்தில் பாலாஜி

Halley Karthik

ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு ஆண்டு இறுதிக்குள் தேர்தல்: ராஜ்நாத்

Mohan Dass

துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான்கான் சந்தேகம்

Web Editor