நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் 137-வது நிறுவன தின உரையாற்றினார்.
அதில், மத்திய பாஜக அரசு வரலாற்றை மாற்றி எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுவதாகவும், இந்த அழிவு சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடும் என்றும் கூறினார்.
இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குற்றஞ்சாட்டிய சோனியாகாந்தி, வெறுப்பு பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், வரலாற்றை மறைத்து பொய்யாக்க முற்பட்டுவருகின்றனர் என்றும் அவர் சாடினார்.








