நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ‘டிமான்டி காலனி’ இரண்டாம் பாகத்திற்காக மீண்டும்,இணைந்துள்ளனர்.
நடிகர் அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.
நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். தனித்துவமான திரைக்கதைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற ‘முதல் இலக்கு’ என்று அவரைப் பாராட்டுவதுடன், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பார்வையாளர் அருள்நிதியை ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இப்போது இருவரும் ‘டிமான்டி காலனி 2’ மூலம் அந்த மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்க மீண்டும் இணைந்து செயல்பட இருக்கின்றனர்.
இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில், “டிமான்டி காலனி திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று மற்றும் படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இதயத்திற்கு நெருக்கமானது. பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் ‘டிமான்டி காலனி 2’ பற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளும் திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின. அருள்நிதி சாரை அணுகியபோது, அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். திதைத்துறையில் அவரது வளர்ச்சி இப்போது அதிகரித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த படத்தில் அவர் இருப்பது ஒரு ரசிகர் கூட்டத்தை இழுக்கும் முக்கிய காரணியாக இருக்கும். என்னை நம்பி எனது இயக்குநர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 இன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது, முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதன்படி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம் “ என்றார்.








