சென்னையில் அளவுக்கு அதிகமான மது அருந்திய ஐ.டி. ஊழியர் பலி

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல மாலில் அனுமதியின்றி நடைபெற்ற டி.ஜே நிகழ்ச்சியில் மது அருந்திய இளைஞர் உயிரிழந்தார். பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டி.ஜே மந்த்ரா கோரா என்பவரை அழைத்து வந்து…

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல மாலில் அனுமதியின்றி நடைபெற்ற டி.ஜே நிகழ்ச்சியில் மது அருந்திய இளைஞர் உயிரிழந்தார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டி.ஜே மந்த்ரா கோரா என்பவரை அழைத்து வந்து சென்னை பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் டிஜே நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு எந்தவித முறையான அனுமதியும் காவல்துறையிடம் இருந்து பெறவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அரும்பாக்கம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறை, விக்னேஷ், மார்க், பரத் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. அத்துடன், மது விருந்தில் பரிமாற வைத்திருந்த 817 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த டி.ஜே நிகழ்ச்சியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஐடி கம்பெனி ஊழியரான மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் நேற்று இரவு அண்ணா நகரில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்டு அதிக அளவில் மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். பிரவீன் மரணமடைந்ததை திருமங்கலம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர். மேலும் மது விற்பனை செய்த அந்த மதுபான கூடத்திற்கு மதுவிலக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். த கிரேட் இந்தியன் காதரிங் என்ற பெயரில் மும்பை சென்னை பெங்களூரு ஆகிய இடங்களில் டி.ஜே நிகழ்ச்சி நடத்துவதாக விளம்பரம் செய்து ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்து இளைஞர்கள் ஒன்று கூட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மட்டும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான  டிக்கெட்டுகள் விற்பனை ஆனதும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.