நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின் போது, சாதீய
அடையாளங்களை வெளிப்படுத்த தடை விதிக்க வேண்டுமென
கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் தேரோட்டம், வரும்
ஜூலை 2 ம் தேதி நடைப்பெற உள்ளது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான
மக்கள் கூடுவார்கள் என்பதால், பலத்த போலிஸ் பாதுகாப்பிற்கு மாவட்ட
நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே நெல்லையை சேர்ந்த மதன்
என்ற வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின் போது, சாதீய அடையாளங்களை
வெளிப்படுத்தும் வகையில் பனியன்களை இரு சமுதாயத்தினர் வழங்க
இருப்பதாகவும், அதே போல் தேரின் மீது சமுதாய கொடிகளை கட்டுவது யார்
என்பதிலும், இளைஞர்களிடையே போட்டி நிலவி வருவதாகவும்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் ஆணையர்
ஆகியோர் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேரோட்டத்தில் ஜாதிய மோதல்களை தடுத்து, உரிய பாதுகாப்புடன்
தேரோட்டத்தை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கு. பாலமுருகன்







