டெல்லி: தமிழ்நாட்டு விவசாயிகள் ரயில் நிலையித்திலேயே தடுத்து நிறுத்தம்

டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகள் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும்,…

டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகள் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும், உர விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த்தரில் போராட்டம் நடத்த சென்றனர். இந்நிலையில், திருச்சியிலிருந்து வந்த விவசாயிகளை டெல்லி ரயில் நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து, அவர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதை கண்டித்து விவசாயிகள் ரயில் நிலையத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ரயில் நிலைய வளாகத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பஞ்சாப் விவசாயிகளை போன்று டெல்லியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்திற்கு எவரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.