மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நினைவாக டெல்லியிலுள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படவுள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவிலுள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 34 வயதில் சுஷாந்த் மரணம் நாடு முழுவதும் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரண மர்மம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெற்கு டெல்லியிலுள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் என்ற பகுதிக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர் சூட்டப்படவுள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலரான அபிஷேக் தத், இதற்கான முன்மொழிவை கொண்டுவந்தார். டெல்லி மாநகராட்சி இந்த முன்மொழிவினை உள்ளாட்சி அமைப்பின் சாலை பெயரிடுதல், மறுபெயரிடுதல் குழுவுக்கு அனுப்பிவைத்தது.
குழுவின் முன்பு அபிஷேக் தத், 8ஆம் எண் சாலையில் பீகாரைச் சேர்ந்த மக்கள் அதிகமான அளவில் வசிப்பதாகவும், ஆண்ட்ரூஸ் கஞ்ச் முதல் இந்திரா கேம்ப் வரை உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் மார்க் என பெயர் வைக்க அவர்கள் வலியுறுத்துவதாகவும் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சுஷாந்த் பெயரை வைக்கும் இந்த முன்மொழிவுக்கு அவரது 35ஆவது பிறந்தநாளான நேற்று மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது. விரைவில் டெல்லியின் சாலை ஒன்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் என அபிஷேக் தத் தெரிவித்துள்ளார்.







