சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்தும், பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு, மாவட்ட வாரியான அரசியல் கள நிலவரங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சசிகலா வருகைக்கு முன்பு நடைபெற உள்ள இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக விரைவில் மாற்றி திறப்பது குறித்தும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.







