அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள்…

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல்சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இது குறித்து  தலைமை நீதிபதி தீர்ப்பு வாசித்தார். அவர் தெரிவித்ததாவது..

” அனைவரும் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளோம். கடந்த 2019ல் நீதிபதி பூசன் அமர்வு வழங்கிய தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறோம். டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் , பங்கும் இல்லை என்பதை ஏற்க முடியாது.

தலைநகர் டெல்லிக்கு அரசு அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற முந்தைய தீர்ப்பை ஏற்க முடியாது. டெல்லி மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தான் டெல்லி சட்டசபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கம் ஆகும். ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கைகளிலேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும்

அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கையில் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலை உருவாக்கும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லை என்றால் அது அந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும்

ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அமைச்சரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கையில் ஆபத்து ஏற்பட்டு விடும். டெல்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த டெல்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு”  என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பினை வாசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.